ஐஐடி தேர்வு என்றால் என்ன? அதில் எப்படி வெற்றி பெறுவது போன்ற வழிமுறைகளை இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
ஐஐடி போன்ற மத்திய தொழில்நுட்ப கல்லூரிகளில் படிப்பது என்பது பல மாணவர்களின் கனவு. அங்கு படிப்பது என்பது பெருமையான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஐஐடியில் சீட் கிடைப்பது கடினம் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி ( ஐஐடி) , நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி- யில் (என்.ஐ.டி) படிக்க விரும்பும் மாணவர்கள் ஜெஇஇ ( Joint Entrance exam ) எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வுக்கு விழுந்து விழுந்து படிக்கின்றனர். ஐஐடி தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிகளை இப்போது பார்க்கலாம்.
ஜெஇஇ தேர்வு :
நாடும் முழுவதும் உள்ள என்.ஐ.டி மற்றும் ஐஐடிகள் உட்பட மத்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் பி.இ, பி.டெக் போன்ற படிப்புகளில் சேருவதற்காக ஜெஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஜெஇஇ என்பது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ)- யால் நடத்தப்படுகிற ஒரு கூட்டு நுழைவுத் தேர்வு. முன்பு ஏஐஇஇஇ என்ற பெயரில் இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இப்போது மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் ஜெஇஇ மெயின் மற்றும் ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. ஜெஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு எழுத முடியும். ஜெஇஇ தேர்வை மையமாக வைத்து 31 என்.ஐ. டி மற்றும் 23 ஐஐடிகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும். அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள பல அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் சேர்க்கைக்கு இந்த ஜெஇஇ மதிப்பெண்களை பரிசீலிப்பார்கள்.ஜெஇஇ மெயின்ஸ்- ல் மொத்தம் 2 தாள்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் ஒன்று மற்றும் இரண்டு தாள்களை விருப்பத்தேர்வு செய்யலாம் அல்லது இரண்டு தாள்களையுமே எழுதலாம்.
முதல் தாள்:
பி.இ/பி.டெக் படிப்புகளின் சேர்க்கைக்காக முதல்
தாளை எழுதுகிறோம். முதல் தாளில் ஆப்ஜக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்பார்கள். ஒவ்வொரு பாடத்திற்கும் தலா 30 கேள்விகள் வீதம் 90 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு 360 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
இரண்டாம் தாள்:
பி.ஆர்க் மற்றும் பி. பிளானிங் படிப்புகளின் சேர்க்கைகாக இரண்டாம் தாளை எழுதுகிறோம். கணிதம்,ஜெனரல் ஆப்டிடியூட் மற்றும் டிராயிங் ஸ்கில்ஸ் தொடர்பானவற்றை கேட்பார்கள். கணிதம்- 30 , ஆப்டிடியூட் – 50 மற்றும் டிராயிங் – 3 கேள்விகள் என மொத்தம் 83 கேள்விகள் கேட்கப்படும்.
அனைத்து தேர்வுகளும் மூன்று மணி நேரம் நடைபெறும். மல்ட்டிபுள் சாய்ஸ் வடிவில் வினாக்கள் இருக்கும். ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஆகிய இரண்டு முறையிலும் இத்தேர்வு நடத்தப்படுகிறது. ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நீங்கள் தேர்வுகளை எழுதலாம். ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான விடைக்கு ஒரு நெகட்டிவ் மதிப்பெண் குறைக்கப்படும். நீங்கள் எழுதாத கேள்விகளுக்கு மதிப்பெண் பிடித்தம் செய்யப்படாது.
ஜெஇஇ தேர்வுக்கு இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். சிபிஎஸ்இ, மெட்ரிக் அல்லது வேறு போர்டுகளில் படித்திருந்தாலும் NCERT புத்தகங்களை முழுமையாக படித்தால் நிச்சயமாக இந்த தேர்வை எழுதுவது குறித்த நம்பிக்கை உங்களுக்கு கிடைக்கும். ஐஐடி தேர்வில் வெற்று பெறுவதற்கான டிப்ஸ்களை இப்போது பார்க்கலாம்.
நாடு முழுவதில் இருந்தும் ஜெஇஇ தேர்வு எழுதுவதால், சற்று கடனமாக தான் இருக்கும். இன்று படித்து நாளை தேர்வு எழுதுவதைப் போல் இத்தேர்வினை எழுத முடியாது. படிப்பதற்கென்று சில அட்டவணைகளை தயாரிப்பது நல்லது. ஒவ்வொரு சப்ஜக்ட் மற்றும் யூனிட்களை பிரித்து வைத்து படித்தால் அது பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் பட்டியலை தயார் செய்து படிக்கும்போது, தேர்வு தாள்களின் பேட்டர்ன் மற்றும் அட்டவணையை தெரிந்து வைத்து படித்தால், எளிமையாக இருப்பதோடு, தேர்வில் வெற்றி பெறவும் உதவியாய் இருக்கும்.
தொடக்கத்திலிருந்து படியுங்கள். எந்த சப்ஜக்ட் எடுத்தாலும் அதன் அடிப்படையில் இருந்து தெரிந்துகொள்ளுங்கள். ஏனென்றால் கட்டமைப்பு வலுவாக இருந்தால் தான் கட்டடம் வலுவாக இருக்கும். அதனால் ஒரு பாடத்தை தேர்ந்தெடுத்து அதன் அடிப்படையில் இருந்து படிக்கும்போது எளிதில் மறக்கமுடியாது.
ஜெஇஇ தேர்வுக்கு படிப்பவர்கள் புத்தகமே வாழ்க்கை என்று இருக்க வேண்டும். நீங்கள் பாடத்திட்டத்தை தேர்ந்தெடுத்து படிப்பதைப் போல், அதில் உள்ள எல்லா கருத்துகளையும் தெரிந்து கொண்டு வைப்பது நல்லது. இதனால் உங்கள் புரிந்துணர்வு உயர்வதோடு, அப்ளிகேஷன் சார்ந்த கேள்விகளுக்கும் எளிதாக பதில் அளிக்க முடியும்.
தேர்வுக்கு முன்பு ரிவைஸ் செய்வதை நாம் பழகியிருப்போம். ஆனால் இந்த தேர்வில், நீங்கள் உங்கள் டாப்பிக்கை படித்து முடிக்க முடிக்க ரிவைஸ் செய்வது அவசியம். பல சமயங்களில் இதனை செயல்படுத்தி பார்க்க வேண்டும் என்பதில்லை. ஒவ்வொரு டாப்பிக்காக ரிவைஸ் செய்வதன் மூலம் உங்கள் இறுதி ரிவிஷனை பதற்றம் இல்லாமல் செய்யமுடியும். இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் படித்துள்ள தலைப்புகள் மனதிற்குள் ஆழமாக பதியும்.
நீங்கள் கஷ்டப்பட்டு படித்தாலும், அதை எழுதி பார்க்காமல் இருந்தால் பயன் தராது.
நீங்கள் படித்தது தொடர்பாக மாதிரி தாள்களை எழுதிப் பாருங்கள். இது உங்களை சுயப்பரிசோதனை செய்திட உதவிடும். இதன்மூலம் உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அடையாளம் காணமுடியும். இதற்கு ஒரு காலக்கெடுவை நிர்ணயம் செய்து முயற்சி செய்து பார்ப்பது நல்லது. மாதிரி தாள்கள் பல இணையத்தளங்கள் மற்றும் புத்தக கடைகளில் கிடைக்கிறது.
முந்தைய ஆண்டுகளின் கேள்வித் தாள்களை தலைப்பு வாரியாக படித்தால், எந்த தலைப்பில் நீங்கள் சிறந்து விளங்குகிறீர்கள் என்று தெரிந்துகொள்ளலாம். அதே சமயம் எது முக்கியமான தலைப்பு என்று பார்த்து, அதற்கு கூடுதல் நேரம் ஒதுக்கி படிக்கலாம். இதற்கு நீங்கள் நேரத்தை நிர்வகிக்கும் திறன்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
ஐஐடி – ஜெஇஇ நுழைவுத் தேர்வு குறித்து நாங்கள் கொடுத்துள்ள டிப்ஸ்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். இதேபோல் கெரியர் குறித்து பல பயனுள்ள தகவல்களுக்கு Arrear Irundalum Career சேனலை subscribe செய்து பயன்பெறுங்கள்
Leave a Reply