இன்றைய சூழ்நிலையில் ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த பல்வேறு யுக்திகளை பயன்படுத்துகின்றனர். அதில் ஒன்று தான் ஃபிரீலான்ஸிங். ஃபிரீலான்ஸிங் மூலமாக பல பேருக்கு வேலைக் கிடைப்பதுடன், சுயதொழில் புரிபவர்களாகவும் இருக்க முடிகிறது. தற்போது நிறுவனங்களும் ஃபிரீலான்ஸிங்கிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. ஏனென்றால் , பணியாளர்களுக்கு, இன்சூரன்ஸ், பி.எஃப் மற்றும் இதர செலவுகளை நிறுவனங்கள் மிச்சப்படுத்துகின்றன. நம்மில் பெரும்பாலானோர் ஃபிரீலான்சர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதை எப்படி தொடங்குவதென்று தெரியாது. எனவே ஃபிரீலான்ஸிங் கெரியர் எப்படி தொடங்குவது மற்றும் அதற்கான யோசனைகளை இங்கே பார்க்கலாம்.
ஃபிரீலான்ஸிங் வேலையை எதற்காக தொடங்கப்போகிறீர்கள்? என்று இலக்கு ஒன்றை நிர்ணயித்து கொள்ளுங்கள். அதாவது முழு நேர வேலைக்கு சென்று கொண்டே, வேறுவழியில் ஊதிய உயர்வு பெற வேண்டும் என்று யோசித்தால் நீங்கள் ஃபிரீலான்ஸிங் கெரியரை தொடங்கலாம். அலுவலகத்திற்கு சென்று பொதுவான அலுவல் நேரங்களில் வேலை செய்யமுடியாது மற்றும் என்னுடைய வேலைக்கு நானே முதலாளி என்று யோசிப்பவர்களும் இந்த ஃபிரீலான்ஸிங் வேலையை தொடங்கலாம். அதுமட்டுமல்லாமல் பல நிறுவனங்களில் வேலை செய்து, பல நுணுக்கங்களை அறிந்து கொண்டு, எதிர்காலங்களில் தொழில் ஒன்றை தொடங்க வேண்டும் என்று யோசிப்பவர்களும் ஃபிரீலான்ஸிங் பணியை தேர்ந்தெடுக்கலாம்.
வாடிக்கையாளர்களை பொறுத்தவரை, எந்தவொரு வேலையும் குறைவான விலையில் தரமானதாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். அனைத்து
ஃபிரீலான்ஸிங் வேலைகளுக்கும், போட்டி ஃபிரீலான்சர்ஸ் இருப்பார்கள். நீங்கள் செய்யும் பணிக்கு குறைந்த விலையை வாடிக்கையாளர்களுக்கு நிர்ணயம் செய்வார்கள். அதனால் நீங்களும் உங்கள் விலையை சமரசம் செய்துகொள்ளாமல், தனித்திறன்களோடு கொடுத்தால் வாடிக்கையாளர்கள் உங்களை தேடி வருவார்கள். அதனால் உங்கள் வேலையின் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
முதலில் யார் யாரெல்லாம் நமது இலக்கு வாடிக்கையாளர்கள் என்பதை பட்டியலிடவேண்டும். இந்த பட்டியலில் உள்ள சில வாடிக்கையாளர்களுடன் நாம் வேலை செய்து பார்க்க வேண்டும். இதில் யாருடன் நம்முடைய ஐடியாலஜி, கிரியேட்டிவிட்டி சரி வருகிறதோ? அவர்களை நமது இலக்கு வாடிக்கையாளர்களாக அடையாளம் காணலாம். இதோடு இல்லாமல் இலக்கு வாடிக்கையாளர்கள் இதற்கு முன் வேறு எங்கு ஃபிரீலான்ஸிங் பணியை கொடுத்தார்கள், யாரிடம் கொடுத்தார்கள், அதற்கு எவ்வளவு தொகை வழங்கினார்கள் என்பதை புரிந்துகொண்டு, ஆராய வேண்டும். ஏற்கனவே வாடிக்கையாளர்கள் மற்றவர்களிடம் கொடுத்த தொகையோடு குறைவாகவும், தரமாகவும் கொடுக்க வேண்டும். இதுவே வாடிக்கையாளர்கள் முன்பு கொடுத்த ஃபிரீலான்சரை விட்டுவிட்டு நம்மிடம் வரவைக்கும் உத்தி.
ஃபிரீலான்ஸிங் பணியை தொடங்கும்முன் முதலில் களப்பணி செய்ய வேண்டும். அதாவது உங்கள் துறையில் இருக்கும் மற்ற ஃபிரீலான்சர்கள் எவ்வளவு விலை நிர்ணயம் செய்கிறார்கள் என்பதை தெரிந்து வைத்து, அதற்கேற்றாற்போல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். இதற்கு இது தான் விலை, எவ்வளவு மணி நேர வேலை உள்ளிட்ட பல தகவல்களை உள்ளடக்கி விலையை நிர்ணயம் செய்து வாடிக்கையாளர்களை அணுக வேண்டும். உங்கள் வேலை, நிர்ணயிக்கும் விலை, தரம் எல்லாம் ஏற்றுக்கொள்ளும்படி இருந்தால் மட்டுமே வாடிக்கையாளர்கள் உங்களை தேடி வருவார்கள். ஒரு முறை நீங்கள் விலையை நிர்ணயம் செய்துவிட்டால் அதை எக்காரணத்தைக் கொண்டும் மாற்றக்கூடாது.
உங்களைப் பற்றியும் நீங்கள் செய்யும் வேலையை பற்றியும் போர்ட்ஃபோலியோ ஒன்றை பராமரிக்க வேண்டும். உங்கள் வேலைக்கான இணையதளம், சமூக வலைதளங்கள் போன்றவற்றை உருவாக்க வேண்டும். அதில் நீங்கள் மற்ற வாடிக்கையாளர்களுக்கு செய்த ,செய்யப்போகிற வேலைகள், உங்களோட தனித்துவம், போன்றவற்றை விபரமாக குறிப்பிடவேண்டும். உங்கள் முகவரி, தொடர்பு கொள்வதற்கான எண்களை தெளிவாக குறிப்பிடவும். குறிப்பாக அனைத்தையும் தற்போது வரை அப்டேட் செய்து வைத்திருப்பது அவசியம்.
ஏனென்றால் வாடிக்கையாளர்கள், உங்கள் வெஃப்சைட்டிற்கு வந்து நீங்கள் செய்த பணிகளை பார்வையிட வசதியாக இருக்கும். ஒரு வேளை வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் செய்த பணி பிடித்திருந்தால் உங்களையே கூட ஃபிரீலான்ஸிங் வேலைகளுக்கு தேர்ந்தெடுக்கலாம். ஃபிரீலான்ஸிங் வேலையை பெற்றுதருவதற்கான பல வெஃப்சைட்டுகள் தற்போது இருக்கின்றன. அதிலும் நாம் நமது வேலையை பற்றி பதிவு செய்து வைக்கலாம். இதனால் வாடிக்கையாளர்களும் நமக்கு கிடைப்பார்கள்.
இலக்கு வாடிக்கையாளர்களை நீங்கள் முடிவு செய்தாலே போதும், முதல் வாடிக்கையாளர் யார் என்பதை நம்மால் தேர்ந்தெடுக்க முடியும். ஃபிரீலான்ஸிங் கெரியருக்கு முதல் வாடிக்கையாளர் தெரிவிக்கும் கருத்துகள் மிக முக்கியம். முதல் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் ரிவியூ என்பது உங்கள் ஃபிரீலான்ஸிங் கெரியரை வளர்த்துக் கொள்வதற்கு உதவியாய் இருக்கும். அதேபோல் நமது திறன்கள் பற்றியும் நம்மால் அறிந்துகொள்ள முடியும்..
உங்கள் திறன்களை வெளிப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்களிடம் நீங்கள் கூறும் வார்த்தைகள் நம்பும்படியாக இருக்க வேண்டும். ஒரு வேளை வாடிக்கையாளர்கள் நம்மை தேடி வரும்போது, அவர்களோட தேவைகள் என்ன என்பதை தெரிந்துகொண்டு, அதற்கேற்றாற்போல் இது முடியும், இது முடியாது, இதனை சிறப்பாக செய்ய முடியும் என்று அவர்களிடம் உத்தரவாதம் கொடுக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் நம்பும்படியாக நாம் பேசி அவர்களை நம் வசம் கொண்டு வரவேண்டும்.
முழு நேர வேலைக்கும் , ஃபிரீலான்ஸிங் வேலைக்கும் தனித்தனியே நேரம் ஒதுக்க வேண்டும். அலுவலகத்தில் இருக்கும் போது ஃபிரீலான்ஸிங் வேலையை செய்யக்கூடாது. முழு நேர வேலைக்கு சேரும் போது, மற்ற பணிகளில் ஈடுபடமாட்டேன் என்று ஒப்பந்தம் செய்திருப்பீர்கள். அதை எக்காரணத்தைக் கொண்டும் மீறக்கூடாது. உங்கள் நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்ட லேப்டாப் மற்றும் இதர பொருட்களை ஃபிரீலான்ஸிங் வேலைக்கு பயன்படுத்தக்கூடாது.
ஃபிரீலான்ஸிங் கெரியரில் வெற்றி பெறுவதற்கு இந்த டிப்ஸ்கள் உதவியாய் இருந்திருக்கும். ஃபிரீலான்ஸிங் கெரியரில் ஒரு நல்ல துறையை தேர்ந்தெடுத்து வாழ்க்கையில் வெற்றி பெற அரியர் இருந்தாலும் கெரியர் சார்பாக வாழ்த்துகள். இதேபோல் கெரியர் குறித்து பல பயனுள்ள தகவல்களுக்கு Arrear Irundalum Career சேனலை subscribe செய்து பயன்பெறுங்கள்.
Leave a Reply