ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்குவது எப்படி? மற்றும் அதற்கான ஆலோசனைகளை இந்த வீடியோ விவரிக்கிறது.
பெரும்பாலான இளைஞர்கள் ஒரு பிசினஸ் தொடங்கவேண்டும் என்ற லட்சியத்தை வைத்துள்ளார்கள். தற்போதைய சூழலில் நமது நாட்டில் பிசினஸ் தொடங்குவது எளிமையான ஒன்றாக உள்ளது. இன்றைக்கு பெரியதாக உள்ள நிறுவங்கள் ஒரு காலத்தில் ஸ்டார்ட் அப்- ஆக தொடங்கப்பட்டது தான். கல்லூரி மாணவர்கள் முதல், வேலைக்கு செல்பவர்கள் வரை ஏதோ ஒரு சூழலில் ஸ்டார்ட் அப் பிசினஸ் தொடங்கவேண்டும் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் ஐடியாவை மட்டும் வைத்துக் கொண்டு அதனை அடுத்த கட்டத்திற்கு எப்படி கொண்டு போவது என்று தெரியாமல் இருப்பார்கள். மத்திய , மாநில அரசுகளும் ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கி செயல்படுத்த ஊக்குவிப்பு தருகின்றது. நீங்களும் ஐடியா மட்டும் வைத்துக் கொண்டு, ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்குவது எப்படி என்று யோசிக்கிறீர்களா? இதோ உங்களுக்கான டிப்ஸ்!
எந்த ஒரு சிறந்த பிசினஸும், சிறந்த ஐடியாவில் இருந்து தான் உருவெடுக்கிறது. அது முற்றிலும் புதிதாக இருக்கலாம், ஏற்கனவே இருப்பதை விட சிறப்பானதாக இருக்கலாம் அல்லது தற்போதுள்ளதை விட வேகமாக பொருட்களை வழங்குவதாக இருக்கலாம். ஆனால், எந்த ஒரு பிசினஸும் தொடங்கப்பட யோசனை என்பது முக்கிய காரணி. ஆனால், இந்த யோசனையை மாற்றி யோசித்தால் நீங்களும் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கிட முடியும்.
ஸ்டார்ட் அப் நடவடிக்கையை தொடங்கிட, சில அடிப்படை விஷயங்கள் தேவையாக இருக்கிறது. முதலீட்டாளர்கள் மற்றும் வங்கிகளிடம் இருந்து நிதி பெறுதல், நல்ல பிசினஸ் திட்டம் ஆகியவற்றுடன் சில கேள்விகளுக்கும் உங்களிடம் விடை இருக்க வேண்டும்.
ஒரு ஸ்டார்ட் அப் அல்லது பிசினஸ் தொடங்குவதற்கு முன்பாக அதற்கு தேவையான நிதியை மதிப்பிடுவதுடன், அதனை எங்கெங்கு, எப்படி செலவிடப் போகிறோம், ஒவ்வொரு ஆண்டும் தேவைப்படும் நிதி எவ்வளவு, முதலீட்டாளர்களிடம் எத்தனை கட்டங்களாக நிதி திரட்ட இருக்கிறோம், எந்தெந்த கால கட்டங்களில் வங்கிகளை நாட வேண்டும், எந்தெந்த வகையில் நிதி ஆதாரங்களை திரட்டலாம், நிறுவனத்தின் வரவு மற்றும் செலவுக்கான ஆதாரம் போன்ற விரிவான திட்டமிடல் முதலியவற்றில் தான் இருக்க வேண்டும்.
இரண்டாவதாக, உங்களின் நிதி நிலைமை எப்படி இருக்கப் போகிறது என்பதை முதலிலேயே திட்டமிட்டுக் கொள்ளவும் தவறக் கூடாது. உதாரணமாக, நீங்கள் எவ்வளவு பணம் முதலீடு செய்யப் போகிறீர்கள். இருக்கும் வேலையை தொடரப் போகிறீர்களா அல்லது வேலையை விட்டு விட்டு பிசினஸில் மட்டும் கவனம் செலுத்தப் போகிறீர்களா? என்பதை முடிவு செய்யுங்கள். ஒருவேளை வேலையை விட்டு விட்டால், பிசினஸ் மேம்படும் வரை உங்கள் செலவுகளை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்? என்பதையும் கவனிக்க வேண்டும்.
உங்கள் நிறுவனத்திற்கு தேவையான சட்டரீதியான ஆலோசனைகள் உதவிகளை பெறுவதிலும் கவனம் அவசியம். புதிய நிறுவனம் லாப நோக்கில் தொடங்கப் படுகிறதா? அப்படிப்பட்ட நிறுவனமாக இருந்தால் உரிமை யாருக்கு, பங்குதாரர்கள் யார் யார்? பிரைவேட் லிமிடெட் கம்பெனியா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும். உரிமையாளராக நீங்கள் உங்களை அறிவித்தால், முதலீடு திரட்டுவதில் உள்ள சட்டச் சிக்கல்கள் என்ன? என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். தற்போதுள்ள சூழலில் பிரைவேட் லிமிடெட் கம்பெனி தொடங்குவது பல வகையிலும் ஆதாயம் தரலாம்.
ஒரு நிறுவனத்தை சட்ட ரீதியாக தொடங்கிட உள்ள நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்.
சட்ட ரீதியான நடைமுறைகள், நிறுவனப் பதிவு ஆகியவற்றை முடித்து விட்டால், பணியாளர் குழுவை உருவாக்கலாம். எத்தனை பேரை உங்கள் நிறுவனத்திற்காக பணியமர்த்தப் போகிறீர்கள். எந்தெந்த நிலையில் அவர்கள் இருப்பார்கள் என்பதையும் வரையறுக்க வேண்டும். ஒரு நிறுவனம் தொடங்கப்படும் ஆரம்ப காலத்தில், தேவைக்கு அதிகமாக பணியாளர்களை சேர்ப்பது சிக்கலை ஏற்படுத்தும். அதே நேரத்தில் சரியான நபரை சரியான பணிக்கு தேர்வு செய்வதும் முக்கியம். அவர்களுக்கான ESI, PF உள்ளிட்டவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நிறுவனம் தொடங்கிய ஆரம்ப காலத்தில் ஒப்பந்த பணியாளர்கள், ப்ரீலான்சர்ஸ்களை நியமனம் செய்வதன் மூலம் செலவீனங்களை குறைக்கலாம்.
உங்கள் நிறுவனம் அல்லது தயாரிப்பை பற்றி மக்களிடம் புரிந்துணர்வை ஏற்படுத்த விளம்பரப்படுத்த வேண்டியது அவசியம். எந்தெந்த முறையில் நீங்கள் மக்களை அணுகப் போகிறீர்கள் என்பதற்கு ஏற்றபடி விளம்பர யுக்தியை கையாள வேண்டும்.
ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கியவுடன், அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அதனை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வழிகாட்டுதல்
www. startupindi.gov.in என்ற இணையதளத்தை ஸ்டார்ட் அப்-க்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த வட்டியுடன் கடன், வரி விலக்கு உள்ளிட்ட பல வசதிகளை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெறமுடியும். இதுவரை இந்த இணையதளத்தில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களிலும் (MSME ) உங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை பதிவு செய்து பயன்பெறலாம்.
இதைத் தவிற ஐஐடி ( சென்னை) , லயோலா இன்ஸ்டிடியூட் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் ( LIBA ) போன்ற அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் நீங்கள் ஆலோசனை பெறலாம்.
ஸ்டார்ட் அப் தொடங்குவது தொடர்பாக நாங்கள் கொடுத்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். இந்த தகவல்களை வைத்து ஒரு நல்ல ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கி வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு அரியர் இருந்தாலும் கெரியர் சார்பாக வாழ்த்துக்கள். இதேபோல் கெரியர் குறித்து பல பயனுள்ள தகவல்களுக்கு Arrear Irundalum Career சேனலை subscribe செய்து பயன்பெறுங்கள்.
Leave a Reply