வாழ்க்கை, வேலையை சமநிலையில் பேலன்ஸ் செய்வதற்கான வழிகள் குறித்து இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக வீட்டிற்கு உள்ளே வரும்போது வேலையை வெளியே விட்டுட்டு வா என்று பெரியவர்கள் கூறக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் இது சாத்தியமில்லை. சில சமயம் வீட்டில் இருந்து அலுவல் பணிகளை ( Work from Home )மேற்கொள்வது தற்போது வாடிக்கையாகிவிட்டது. வாழ்க்கை, வேலை இரண்டுமே முக்கியம் தான். வேலைக்காக குடும்பத்தை கவனிக்காமலும், குடும்பத்துக்காக வேலையை கவனிக்காமல் போனாலும் சிரமம்தான். அலுவலகத்தில் எத்தனை மணி நேரம் ஒரு ஊழியர் வேலை செய்கிறார் என்பதை விட, அலுவலக நேரத்தில் ஸ்மார்ட்டாக வேலைகளை முடிக்கிறாரா என்பதே முக்கியம். தற்போதைய சூழலில் எந்த நேரத்திலும் வேலையை விட்டு தூக்கலாம் என்ற நிலை உள்ளதால், லீவ் கேட்பதற்கும் கூட நமக்கு தோன்றுவதில்லை. இன்றைய நிலையில் பிடித்தோ, பிடிக்காமலோ இயந்திரம் போல வேலை செய்ய நாம் பழகிவிட்டோம். வேலையையும் , குடும்பத்தையும் சமமாக எப்படி கையாளுவது என்பது குறித்து பலருக்கும் புரியாத புதிராக உள்ளது. வாழ்க்கையையும், வேலையையும் ஒரே சமநிலையில் வைத்திருக்க இந்த டிப்ஸ்கள் உங்களுக்கு கைகொடுக்கும்.
பள்ளி பருவத்தில் முதல் இடம் பிடிக்கவேண்டும் என்பதற்காக விழுந்து விழுந்து படித்திருப்போம். இப்போது வேலையிலும் நாம் இதையே கடைபிடிக்கிறோம். பள்ளியில் நமக்கு படிப்பது மட்டுமே வேலையாக இருந்தது. ஆனால் தற்போது நமக்கு நிறைய வேலைகள் மற்றும் பொறுப்புகள் உள்ளன. எனவே ஒன்றன் மேல் மட்டும் கவனம் செலுத்தாமல் அனைத்திற்கும் சமமாக முக்கியத்துவம் கொடுத்து செயல்படவேண்டும்.
தற்போது உள்ள சூழல் மற்றும் வயதில் , ஒரு வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது கடினம். பல வேலைகளை நாம் எடுத்து செய்வதை மல்ட்டி டாஸ்க்கிங் என்கிறோம். இது திறன்களாக கூட பார்க்கப்படுகிறது. ஒரு நாள் உங்கள் வேலையை பொறுத்து இவ்வளவு நேரம் தான் வேலைக்கு செலவழிப்பேன் என உறுதியெடுங்கள். வீட்டிற்கு சென்று அலுவலக பணியை செய்யும் போது, வீட்டில் இருப்பவர்களுடன் செலவழிக்கும் நேரம் வீணாகிறது. எனவே மல்ட்டி டாஸ்க் செய்யாமல், எந்தெந்த நேரத்தில் என்னென்ன வேலைகளை செய்ய முடியுமோ அதை மட்டும் செய்வது நல்லது.
அனைத்து வேலையையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது. ஒன்றின் பின் ஒன்றாக தான் செய்ய முடியும். அதனால் எது முக்கியம், முக்கியமில்லை என்பதை தேர்வு செய்து பின்னர் உங்கள் வேலையை தொடருங்கள். வேலையை 4 வகைகளாக பிரிக்கலாம்.
முக்கியமானதும் அவசரமானதும் – எல்லா வேலையை விட முக்கியமானது. உடனே செய்து முடிக்க வேண்டிய பணி இது.
முக்கியம் ஆனால் அவசரம் இல்லை – முக்கியமானதாக இருந்தாலும் சற்று தள்ளி வைத்து பிறகு அந்த வேலையை செய்யலாம்
அவசரம் ஆனால் முக்கியமில்லை – முக்கியமான வேலையாக இருந்தாலும் வேறு யாருக்காவது ஒதுக்கலாம்
அவசரம் இல்லை முக்கியமில்லை – உடனே செய்து முடிக்க வேண்டியதில்லை. எல்லா வேலையும் முடித்த பின் செய்யலாம்.
எல்லா நேரங்களிலும் வேலை செய்யாமல், குறிப்பிட்ட நேரத்திற்கு வேலை செய்வதோடு, அதனை அட்டவணைப்படுத்துங்கள். ஒரு நாளைக்கு அலுவலகத்தில் எவ்வளவு நேரம் வேலைகளை கவனிக்க வேண்டும். , குடும்பத்துடன் எவ்வளவு நேரம் செலவிடவேண்டும் என்பதை சரியாக திட்டமிட்டால், உங்களது குடும்பம் மற்றும் வேலைக்கான நேரம் சமநிலையில் அமையும். அதோடு மட்டுமல்லாமல் உங்கள் வேலை நேரத்தை பற்றி அலுவலகத்தில் தெளிவாக குறிப்பிடுங்கள். தொழில்நுட்ப உலகில் பணியாளர்கள் 24 மணி நேரமும் அலுவலகத்துடன் தொடர்பில் இருப்பது அவசியமாகிறது. வேலை நேரத்திற்கு பிறகு உங்களை எந்த எண்ணில், எப்படி தொடர்பு கொள்வது, இ-மெயில்களுக்கு எவ்வளவு நேரத்தில் உங்களால் பதில் அளிக்க முடியும் என்பதை தெரியப்படுத்துங்கள். இதனால் உங்கள் மேலாளருக்கும் உங்கள் வேலை நேரம் தொடர்பான புரிதல் இருக்கும், அதேசமயம் நாள் முழுவதும் நீங்கள் வேலை செய்யும் பிரச்சனையும் இருக்காது.
இன்றைய பணி சூழலில் வேலையை வாழ்க்கையாக நினைத்து நாம் பணிபுரிகிறோம். இப்படி இருக்கும்போது கெரியரில் வளர்ச்சி இருக்கலாம், ஆனால் வாழ்க்கை என்று வரும்போது சிக்கல்தான். இதனால் ஏதாவது சாதித்தால் கூட நம்மால் அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியாது. ஓய்வு இல்லாமல் உழைப்பதனால் நமக்கு மன அழுத்தம் அதிகமாகிறது. இதனால் உடல்நிலை பாதிக்கப்படுவதோடு, உங்கள் செயல்திறனும் குறைவாகும் நிலை ஏற்படும். எனவே பரபரப்பான வேலைக்கு நடுவே சிறிது அவகாசம் தந்துவிட்டு, புத்துணர்ச்சி அடைந்தவுடன் அந்த வேலையை மீண்டும் தொடருங்கள். வாக்கிங் செல்லலாம், காபி குடிக்கலாம் , பாடல் கேட்கலாம் இப்படி பல வகையில் நமது மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.
கெரியரில் எப்படி உங்கள் வளர்ச்சி முக்கியமோ, அதேபோல் உங்கள் வாழ்க்கையிலும் வளர்ச்சி முக்கியம். வேலைக்கு செக் லிஸ்ட் தயார் செய்வதைப் போல், வாழ்க்கையிலும் ஓய்வு நேரம், குடும்பத்துடன் செலவழிக்கும் நேரம் ஆகியவற்றிற்கும் ஒரு செக் லிஸ்ட் தயார் செய்து அதனை பின்பற்ற வேண்டும். வாழ்க்கையையும், வேலையையும் சமநிலையில் பேலன்ஸ் செய்வதற்கு நாங்கள் கொடுத்த டிப்ஸ்கள் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று எண்ணுகிறோம். இதேபோல் கெரியர் குறித்து பல பயனுள்ள தகவல்களுக்கு Arrear Irundalum Career சேனலை subscribe செய்து பயன்பெறுங்கள்.
Leave a Reply